குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
5/15/2011

திருக்குறளரங்கம் - 10

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்.

                கடந்த 21 -05 -2011 சனிக்கிழமை  பிற்பகல் மூன்று மணியளவில், எண் 21 புல்வார் ழுலியன் தெவோசு, 27200  வெர்நோன். எனும் முகவரியில் உள்ள, திரு.போர் என்செல்வம  (கம்பன் கழக செயற்குழு உறுப்பினர்) திருமதி. அருணாசெல்வம் (கம்பன் இதழ் ஆசிரியர், கம்பன் மகளிரணி செயற்குழு உறுப்பினர்) இல்லத்தில் கம்பன் கழக மகளிரணியினர் நடத்தும் பத்தாம் "குறள்அரங்கம்" நிகழ்வுகள்  சிறப்பாக நடந்தேறின.
                இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது.திரு. என்செல்வம் அவர்கள் தம் இல்லம் வந்த அனைவரையும் அன்பாக வரவேற்றார். வரவேற்பைத் தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாகத் திருக்குறள், பொருளதிகாரம், அரசியல், 41 வது  அதிகாரம் "கல்லாமை" தொடங்கி 45 ஆம் அதிகாரம் "பெரியாரைத் துணைகோடல்" ஈறாக, ஐந்து  அதிகாரங்கள்  வந்திருந்த அனைவராலும் ஒருமித்த குரலில் படிக்கப் பட்டு தனித்தனியாக வொவ்வொரு அதிகாரத்திற்கும்  ஒவ்வொருவரால் விளக்கவுரை அளிக்கப் பட்டது. "கல்லாமை" அதிகாரத்திற்குத் திருமதி. சரோசா தேவராசு, "கேள்வி" அதிகாரத்திற்குத் திருமிகு. தணிகா சமரசம், "அறிவுடைமை" அதிகாரத்திற்குத் திருமதி. அருணா செல்வம், "குற்றங்கடிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு. வே. தேவராசு ஆகியோர் சிறப்பான முறையில் ஆய்வு செய்து விளக்கவுரை அளித்தனர்.
                திருக்குறளை  அடுத்து, "பொன்னியின் புதல்வன்" என்னும் தலைப்பில் எழுத்தாளர் "கல்கி" யைப் பற்றித் திருமிகு. கி.அசோகன் அவர்கள் பல அரிய செய்திகளையும் கருத்துக்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். "சிறப்புச் சொற்பொழிவு" அனைவருக்கும் மிகுந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, திங்கள்தோறும் "குறள்அரங்கம்" நிகழ்வுகளின் போது நடைபெறும் "கவிதை அரங்கம்" நிகழ்ச்சி தொடங்கியது இதில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களும், கம்பன் கழகத் தலைவர், கவிஞர், திரு. கி. பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை இலக்கணம் மற்றும் மரபுக் கவிதை எழுதும் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற கவிஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. "இதயம்" என்ற தலைப்பில் கவிஞர்கள் வாசித்தளித்த எல்லாக்  கவிதைகளும்  இதயத்தை நிறைத்து இனிக்கச் செய்ததன. இக்கவிதையரங்கத்தில், கவிஞர்கள்:: வே.தேவராசு, பழ சிவஅ, லிங்கம் செயமாமல்லன், தணிகா சமரசம், த.சிவப்பிரகாசம்,திரு. பெல்மோன் பிரகாசு,  கோமதி சிவஅரி, அருணா செல்வம், சரோசா தேவராசு, ஆதிலட்சுமி வேணுகோபால்  ஆகியோர் கவிதைகளை வாசிக்கத் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் தலைமைக் கவிஞராக அமர்ந்து அரங்கைச் சிறப்பித்தார்.  நிகழ்ச்சியின் இறுதியாக, அன்றுத்  தம் இல்லத்திற்கு வந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டுச் சிறப்பித்த அனைவருக்கும் திருமதி அருணா செல்வம் நன்றி கூறினார்.
               அன்றைய நிகழ்வுகளில், வழக்கமாகக் "குறள் அரங்கில்" கலந்து கொள்பவர்களோடு வேர்நோன் நகர மக்களும்  சேர்ந்து 34 பேர்கள் கலந்து கொண்டுச் சிறப்பித்தனர்.
                வந்திருந்த அனைவருக்கும் நிகழ்வுகளின் இடையிடையேயும், இரவு விருந்தாகவும் திரு, திருமதி என்செல்வம் இனையர்  விருந்தோம்பல் எல்லோரையும் திக்கு முக்காட வைத்தது. யாருக்கும் வயிறுதான் போதவில்லை.
அவ்வளவு சுவையான  விருந்து மற்றும் உபசப்பு.வாழ்க அவர்கள் பனி! வளர்க அவர்கள் இல்லம்!
                             
                                                                            சரோசா தேவராசு

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.