குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
8/16/2011

திருக்குறளரங்கம் -13

இன்பத் தமிழ் மாந்தும் இனிய அன்பர்களே! வணக்கம்!
                             
        பிரான்சுக்  கம்பன் கழகம் மகளிரணி தொடர்ந்து நடத்திவரும் 'குறள் அரங்கம்' நிகழ்ச்சியின் பதின்மூன்றாம்  நிகழ்வுகள்  கடந்த 20.08 .2011 சனிக்கிழமைப் பிற்பகல் மூன்று மணியளவில் திருமிகு தேவராசு திருமதி சரோசாதேவராசு இணையர் இல்லத்தில் (19.Chemin des Pipeaux, 95800.CERGY St CHRISTOPHE ) மிகச் சிறப்பாக நடந்தேறியது. திருமதி. சரோசாதேவராசு அவர்கள் இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களைப் பாடினார்., திருமிகு வே.தேவராசு அவர்கள் தங்கள் இல்லம் வந்த அனைவரையும்  வரவேற்று வரவேற்புரையாற்றினார்.  கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் கம்பன் கழகச் செயலாளர் பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்கள் முன்னிலையில் கம்பன் கழக மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.இதில், கம்பன்கழகம், கம்பன்கழக மகளிரணி, இளையோரணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.
                                      முதலாவதாக, திருக்குறள் (பொருட்பால்-அரசியல்) 56 ஆம் அதிகாரம் முதல் 60 ஆம்அதிகாரம்வரை வருகைபுரிந்த அனைவராலும் படிக்கப்பட்டு  ஐந்து பேர்களால் விளக்கமளிக்கப் பட்டன. கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்திற்குத் திருமதி.லூசியா லெபோ அவர்களும்,வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்திற்குத் திருமதி.இராசேசுவரி சிமோன் அவர்களும்,கண்ணோட்டம் என்னும் அதிகாரத்திற்குப் பேராசிரியர்.லெபோ பெஞ்சமின்  அவர்களும், ஒற்றாடல் என்னும் அதிகாரத்திற்குத் திருமிகு.வே.தேவராசு அவர்களும், ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்திற்குக் கவிஞர் கி.பாரதிதாசன் அவைகளும் தத்தமக்கே உரிய நடையில்  விளக்கங்களை அளித்துச் சிறப்பித்தார்கள் இல்லத்தார் அளித்த  இனிய தேநீர் விருந்திற்குப் பிறகு அடுத்த நிகழ்வாகக் "கவிதை அரங்கம்" நடைபெற்றது.
                                  "வேண்டும் வரம்" என்னும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றகவிதையரங்கத்தில் ,கவிஞர்கள்:லெபோ பெஞ்சமின், இராசேசுவரி சிமோன், வே.தேவராசு, லூசியா லெபோ, சரோசா தேவராசு, பழ. சிவஅரி, லிங்கம் செயமாமல்லன், சு.மதிவாணன், கோமதி சிவஅரி, குணசுந்தரி பாரதிதாசன் ஆகியோர்  கலந்து கொண்டு கவிதைகளை வழங்கினார்கள். கவிச்சித்தர் கண கபிலனார் அவர்கள் தன்னுடைய  வாழ்த்துக் கவிதையால்  குறள் அரங்கத்தை வாழ்த்திப் பாராட்டினார்கள்.இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'சிறப்புச் சொற்பொழிவு' நடைபெற்றது.
                                   திருமிகு சு.மதிவாணன் அவர்கள் அன்பின் பல்வேறு நிலைகளையும் இயல்புகளையும் குறித்து 'அன்பு' என்னும் தலைப்பின்கீழ்  அழகான, இனிமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். திருமதி சரோசாதேவராசு அவர்கள் அன்றைய நிகழ்வுகளுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இரவு எட்டு மணிக்குச் சுவையான   சிற்றுண்டி  விருந்துடன் பதின்மூன்றாம் குறள் அரங்க நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவேறின.

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.