குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
6/07/2011

திருக்குறளரங்கம் - 11

அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர்! வணக்கம்!
                               கம்பன்கழக  மகளிரணி  நடத்தும்  குறள்அரங்கம்  மற்றும்  கவிதையரங்கம் ஆகிய நிகழ்வுகள், கடந்த 18 .06 .2011 சனிக்கிழமைப்  பிற்பகல் மூன்று  மணி முதல் எட்டு மணிவரை மிகச் சிறப்பாக நடந்தேறியது. வீல்தநேசு  நகரில், திரு.சிவஅரி திருமதி.கோமதி சிவஅரி இல்லத்தில்  நடைபெற்ற இப் பதினொன்றாம்  குறள்அரங்கத்திற்குப்  பேராசிரியர் செவாலியே க. சச்சிதானந்தம் அவர்கள் தலைமையேற்றுச் சிறப்பித்தார்கள். பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் பல நல்ல பிரஞ்சுக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம்  செய்துத் தமிழுக்குத் தொண்டு செய்து வருபவர். இதுவரையில் ஏறக்குறைய எழுநூறுக்கும் மேற்பட்ட கதைகளைத் தமிழில் மொழியாக்கம்  செய்து வெளியிட்டுள்ளார். தமிழ், ஆங்கிலம்,பிரஞ்சு என மும்மொழிப் புலமையும், ஆழ்ந்த கல்வி ஞானமும்  நிரம்பிய பேராசிரியர் திரு. சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், இறை வணக்கம்,   தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடல்களுடன்  இனிதே தொடங்கின.திரு சிவஅரி அவர்கள், தமது இல்லத்திற்கு வருகை தந்த அன்பர்களை  இனிமை பொங்க  வரவேற்றார்.
                               இன்றைய அரங்கில், 46 ஆம் அதிகாரம் முதல்  50 ஆம் அதிகாரம் வரை மொத்தம் 50 குறட்பாக்கள்  படிக்கப் பட்டு விளக்கங்கள்  அளிக்கப்பட்டன. "சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்திற்குப் பேராசிரியர்  லெபோ பெஞ்சமின் அவர்கள், ஆங்கில இலக்கியங்களிலிருந்தும்  மேற்கோள்கள் காட்டி  விளக்கமளித்தார்கள். அடுத்து, "தெரிந்து செயல்வகை" என்னும் அதிகாரத்திற்குத் திருமதி சிமோன் அவர்களும்,"வலியறிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு வே.தேவராசு அவர்களும்,"காலமறிதல்" அதிகாரத்திற்குத் திருமதி சரோசா தேவராசு அவர்களும், "இடனறிதல்" அதிகாரத்திற்குத் திருமிகு  கி. பாரதிதாசன் அவர்களும் அருமையான முறையில் விளக்கவுரை அளித்தது  மிகவும் சிறப்பு.   அடுத்து,மாலைச் சிற்றுண்டியுடன் தேநீர் உபசரிப்பிற்குப் பிறகு, பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள்  தன்னுடைய பத்திரிக்கை அனுபவங்களையும், தான் எவ்வாறு  எழுத்துத் துறைக்கு வந்தார், தனக்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் யார்யார் , தன்னுடைய புத்தகங்களின்  நோக்கம் மற்றும் தன்னுடைய இளமையின் இரகசியம் போன்றவற்றைப் பற்றி மிகவும் தெளிவாகவும் அழகாகவும்
சுவையாகவும் எடுத்துரைத்த விதம், இன்று எழுத்துலகில் வளரத் துடிக்கும் அனைவருக்கும்   நல்ல தெளிவையும் ஊக்கத்தையும்  அளிக்கும் வண்ணம்  அமைந்திருந்தது.அவருக்கு எங்கள் கம்பன் கழக மகளிரணியின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                            அடுத்துச் "சிறப்புச் சொற்பொழிவு" நிகழ்வில் திருமதி ஆதிலட்சுமவேணுகோபால்
அவர்கள், வடலூர் அருட்பிரகாச வள்ளலார் அருட்திரு இராமலிங்க அடிகள் அவர்களின் அருள் நெறிகளையும் தொண்டுகளையும் "புரட்சித் துறவி" என்னும் தலைப்பில் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். பல அரிய செய்திகளையும் விளக்கிக் கூறிய விதம் பாராட்டுக்குரியது.
அடுத்ததாக, மகளிரணி, குறள் அரங்கத்தின்  இனிய  நிகழ்வாகப் பலரும் ஆவலுடன் பங்குகொள்ளும் "கவிதையரங்கம்"  களைகட்டியது. இன்றைய கவிதையின் தலைப்பு "திருவடி"
கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் தலைமையில், திருவாளர்கள்:தணிகா சமரசம்,சு.மதிவாணன், கி.அசோகன்,வே.தேவராசு, பழ.சிவஅரி,லிங்கம் செயமாமல்லன், லெபோ பெஞ்சமின் மற்றும் திருமதியர்:சிமோன்,லூசியா லெபோ, சரோசா தேவராசு,சுகுணா சமரசம் ஆகியோர் கவிதைகளை  வாசிததனர்.திருமதி அருணா செல்வம் அவர்கள் நிகழ்வுக்கு வரஇயலாத காரணத்தால் அவருடைய கவிதையும் வாசிக்கப்பட்டது.இப்படிப் பலபேர்களையும் கவிஞர்காளாக மாற்றிய பெருமை கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களையே சாரும். நிறைவாகச் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் க. சச்சிதானந்தம் அவர்களுக்குக் கம்பன் கழகத் தலைவர்கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள்   பொன்னாடை அணிவித்துக் , கம்பன் கழகச் சார்பாக வாழ்த்து மடலும் வாசித்தளித்தார். நினைவுப் பரிசாகக் , "கம்பன் மகளிரணி  விழா மலர்"மற்றும் "கம்பன் இதழ்" ஆகியவற்றை அளித்துச் சிறப்பித்தார்கள். திரு, திருமதி சிவ அரி குடும்பத்தாருக்கும் பொன்னாடை அணிவித்துக்  "குறள் அரங்க" வாழ்த்து மடல்  வாசித்தளித்து சிறப்பிக்கப்பட்டது. பின்னர் திரு சிவஅரி  அவர்கள் அனைவருக்கும்  நன்றி தெரிவித்து  இரவு விருந்தை ஏற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டா. சுவையான இரவு விருந்துடன்  பதினொன்றாம்  "குறள் அரங்கம்" நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறின.
                              
                                                                           - "தாமரை"

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.